Ad Widget

மாணவர் மீது வாள் வெட்டு: சூத்திரதாரி கைது

மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் கடந்தமாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் தெல்லிப்பழை அளவெட்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (08) கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படிவாள் வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கடந்தமாதம் 27ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கைதானவர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் பிறிதொரு வழக்குக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றிற்கு சென்றுவிட்டு வருகையில் நீதிமன்றுக்கு வெளியில் வைத்து பொலிஸார், குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கடந்தமாதம் 25ஆம் திகதி செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்றிருந்த இசை நிகழ்ச்சியினை பார்வையிட்டு வந்த யாழ். பல்கலைகழக மாணவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள் வெட்டை மேற்கொண்டிருந்தனர்.

இச் சம்பவத்தில், வவுனியாவை சேர்ந்த ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை துண்டிக்கபட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வவுனியாவை சேர்ந்த க.ரஜீவன் (வயது 23), முல்லைத்தீவை சேர்ந்த எஸ்.ஜெபர்ஸன் (வயது 23), ஆகிய இருவரும் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவ்வாள் வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மானிப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Posts