Ad Widget

மாணவர் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர வேண்டும் -அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. ‘ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்’ என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக, மாணவர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர வேண்டும் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் கூட்டுறவு தொடர்பாகப் பாடசாலைகளில் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (07.07.2015) நடைபெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றியபோது,

உலகின் பல்வேறு நாடுகளில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆனால், நாங்கள் மாணவர் கூட்டுறவு அமைப்புகள் பற்றிய அக்கறை அற்றவர்களாக உள்ளோம். யாழ் மாவட்டத்தில் 56 பாடசாலைக் கூட்டுறவு அமைப்புகள் கூட்டுறவுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்றே மூன்று அமைப்புகள்தான் உயிரோடு உள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளிலும், வவுனியா மாவட்டத்தில் ஏழு பாடசாலைகளிலும், மன்னார் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளிலும் என்று, வடக்கில் உள்ள ஆயிரம் பாடசாலைகளில் 23 பாடசாலைகளில் மாத்திரமே கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகின்றன.

மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கிச் செயற்பட முடியும். பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை இவர்களே நடாத்தலாம். இங்கு நியாய விலையில் கற்றல் உபகரணங்களை விற்பனை செய்யலாம். மாணவர்களால் மாணவர்களுக்காகவே உருவாக்கப்படும் இந்தக் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வறுமை நிலையில் உள்ள சகமாணவர்களின் கற்றல் தேவைகளுக்குக் கொடுத்து உதவலாம். பாடசாலைச் சுற்றாடல் பராமரிப்பில் உதவலாம்.
மாணவர் ஒருவர் கூட்டுறவு அமைப்புகளில் சேவையாற்றுவதன் மூலம் சிறுவயதில் இருந்தே சமூகத்துடன் கூட்டுறவாக வாழுகின்ற உயர்ந்த விழுமியத்தைக் கற்றுக்கொள்ள முடியும். சிறந்த நிதி நிர்வாகியாகவோ, வணிக முகாமைத்துவத்தில் விற்பன்னராகவோ ஆகுவதற்கான ஆற்றலை விருத்தி செய்ய முடியும். இப்படிப் பன்முக ஆற்றல்களை மாணவர்களிடையே விதைக்கக் கூடிய கூட்டுறவு அமைப்புக்களைப் பாடசாலைகளில் உருவாக்குவதற்குக் கூட்டுறவுத் திணைக்களத்தோடு, கல்வித் திணைக்களமும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் மாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

cooperative-pricegiving-day07_07_2015-01

cooperative-pricegiving-day07_07_2015-02

cooperative-pricegiving-day07_07_2015-03

cooperative-pricegiving-day07_07_2015-04

cooperative-pricegiving-day07_07_2015-05

cooperative-pricegiving-day07_07_2015-06

cooperative-pricegiving-day07_07_2015-07

cooperative-pricegiving-day07_07_2015-08

cooperative-pricegiving-day07_07_2015-09

cooperative-pricegiving-day07_07_2015-10

cooperative-pricegiving-day07_07_2015-11

cooperative-pricegiving-day07_07_2015-12

cooperative-pricegiving-day07_07_2015-13

cooperative-pricegiving-day07_07_2015-14

Related Posts