Ad Widget

மாணவர்கள் தாக்குதல் : மூவருக்கு பிணை

கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்டத்துகுட்பட்ட ஸ்கந்தபுரம் இல-2 பாடசாலையில் அதிபரின் கைத்தொலைபேசி ஒன்று கடந்த மாதம் பாடசாலை நேரத்தில் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து மேற்படி பாடசாலையில் கல்வி கற்றுவரும் தரம் 06 வகுப்பினைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்;த தரம் 09 மாணவர்கள் இருவர் தாக்கியதில் குறித்த மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 27ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸார் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் தரம் 09 வகுப்பைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்;திருந்தனர்.

மேலும், கடந்த 9 ஆம் திகதி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியினாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபரையும் இரு மாணவர்களையும் கடந்த 16 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்த போதும் குறித்த தினத்தில் மூவரும் ஆஜராகவில்லை.

இந் நிலையில் இவர்களை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் திங்கட்கிழமை (21) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அதிபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையிலும் இரு மாணவர்களையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்துள்ளார்.

Related Posts