மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டம்

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நீண்ட தூரங்களில் இருந்து அதிகாலையே வைத்தியசாலைகளுக்கு வந்த நோயாளர்கள், சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமல் நீண்ட நேரம் காத்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, சுகாதார அமைச்சுக்குள் அனுமதியின்றி மாணவர்கள் நுழைந்ததை தொடர்ந்து பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு, மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தின் சுமார் 100 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 57 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தை கண்டிக்கும் வகையிலேயே இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts