Ad Widget

மாணவர்களின் போராட்டத்தை உலங்கு வானூர்தியில் அவதானித்த பொலிஸார்?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகைப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் இன்று காலை எட்டு மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை, யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றின் பணிகள் முடக்கப்பட்டிருந்ததுடன், ஏ9 வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் இறுதியில், யாழ் மாவட்ட அதிபர் மற்றும் வட மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோரிடம், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்கான மனுக்களையும் மாணவர்கள் கையளித்துள்ளனர்.

கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் வைத்து கடந்த 21ஆம் திகதி வியழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பொலிசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும் இன்று காலை ஏழு மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களுக்கும் முன்னால் திரண்ட மாணவர்கள், அங்கு அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முதலில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இந்த முற்றுகைப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்த நிலையில் எட்டு மணியாகும் போது ஏனைய மாணவர்களும் இதில் இணைந்துகொண்டனர்.

மாணவர்களின் இந்த முற்றுகைப் போராட்டத்தால், அனைத்து வாயில்களும் மூடப்பட்டதால், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருந்தனர். இதனால் யாழ் மாவட்ட செயலகத்தின் வழமையான நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் சிங்கள மாணவர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாகவும் ஆளுநர் அலுவலகத்தின் ஊழியர்களும் உள்ளே செல்ல முடியாது வெளியே காத்திருந்தனர். இதனால் ஆளுநர் அலுவலகப் பணிகளும் முடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பத்துமணியளவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு தொகுதியினர் ஏ 9 வீதியில் அமர்ந்து வீதி மறியல்போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஏ9 வீதியின் போக்குவரத்தும் முடக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டியும், படுகொலையை கண்டித்தும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இணைந்துகொண்டிருந்தனர்.

யாழ். நகரின் முக்கிய அரச அலுவலகங்கள் மாணவர்களால் முற்றுகையிடப்பட்டு முடக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டம் இடம்பெறும் பகுதிகளுக்கு செல்வதை பொலிஸ் முழுமையாக தவிர்த்துக்கொண்டிருந்தனர்.

வழமையாக தமிழர் பிரதேசங்களில் மாத்திரமன்றி தென்பகுதியில் போராட்டங்கள் இடம்பெறும் போது நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசாரும், படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்படும் நிலையில், இன்று இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரியையும் காணக்கிடைக்கவில்லை.

மாணவர் படுகொலையுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்புபட்டுள்ளதால், கடும் ஆத்திரத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில் பிரசன்னமாவதை பொலிசார் திட்மிட்டே தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மாணவர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட போராட்டம் 11.00 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களின் பிரதிகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோரிடம் கையளித்த மாணவர்கள், முற்றுகை போராட்டத்தை முடித்துக்கொண்டு அமைதியாக கலைந்துசென்றுள்ளனர்.

இதற்கமைய எந்தவித அம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்று முடிந்துள்ளது. அதேவேளை இந்தப் போராட்டங்களின் போது எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போராட்டம் நிறைவடையும் நிலையில் உலங்கு வானூர்தியொன்று வானத்தில் வட்டமிட்டுள்ளது. மாணவர்கள் முன்னால் வருவதை தவிர்த்துக்கொண்ட பொலிசார் வானத்திலிருந்து மாணவர்களின் போராட்டத்தை அவதானித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts