Ad Widget

மாணவன் வெட்டிக் கொலை, சந்தேக நபர் பொலிஸில் சரண்

jail-arrest-crimeகோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து மாணவன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உரும்பிராய் பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ள அதேவேளை கொலை செய்யப்பட்ட மாணவனின் இரு சகோதர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மாணவனின் சகோதரர்கள் இருவரையும் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் உரும்பிராயியைச் சேர்ந்த இருவரை தாக்கிப் படுகாயமடையச் செய்தமை தொடர்பிலே ரவீந்திரன் செந்தூரன், ரவீந்திரன் சாரங்கன் ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் ஒருவரான உரும்பிராய் சிவகுல வீதியியைச் சேர்ந்த யோகராசா ஜெனார்த் என்பவர் சரணடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

மேற்படி சம்பவத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியிருந்ததுடன், அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

பலியாகிய சுகிர்தன் திங்கட்கிழமை பிற்பகல் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனை காலால் உதைந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள் குறித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். இதில் உரும்பிராயைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20), எம்.நிராஜன் (23) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரின் நண்பர்கள் 7 மோட்டார் சைக்கிள்களில் திங்கட்கிழமை இரவு சுகிர்தனின் வீட்டிற்கு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன், சகோதரர்களும் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்ததில், றொபின்ராஜ், நிராஜன் ஆகியோரினை அடித்துப் படுகாயமடையச் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் சுகிர்தனின் சகோதரர்களான செந்தூரன், சாரங்கன் ஆகியோரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தினையடுத்து உரும்பிராய் பகுதியிலுள்ள 7 வீடுகள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts