Ad Widget

மாங்குளம் வைத்தியசாலை மனிதப் புதைகுழி; எச்சங்கள், ஆடைகள் மீட்பு!!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இரண்டாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின் போது மீட்கப்பட்ட எச்சங்களின் அடிப்படையில் 3 நபர்களின் எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன், அகழ்வுப் பணிகளை இன்றும் முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் எஸ்.லெலின்குமார் உத்தரவிட்டார்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு நிலையத்துக்கான கட்டடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அந்த இடத்தில் வெடிபொருள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதனால் கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனத்தால் வெடிபொருள்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணிகளின் போது கடந்த புதன்கிழமை மனிதக் கை மற்றும் கால் எலும்புகள் தென்பட்டன. அவை தொடர்பில் மாங்குளம் பொலிஸார் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த முல்லைத்தீவு நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்றையதினம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. மனித எச்சங்கள், ஆடைகள் என்பன மீட்கப்பட்டன.

மனித எச்சங்களின் அடிப்படையில் 3 நபர்களுடையவையாக அவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றன. முழுக்காற்சட்டைகள், சேட்கள் மற்றும் சேலைத் துண்டு என்பனவும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட தடயப்பொருள் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகளை இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்க முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.

Related Posts