Ad Widget

மாங்குளம் நகர்கிறது மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம்

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை மாங்குளத்தில் அமையவுள்ளது. இதற்கான பணிமனைக் கட்டிடத்துக்கான அடிக்கல் மாங்குளத்தில் நாட்டப்பட்டுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11.03.2017) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.

இரண்டு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதெற்கென 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் இணைந்து வழங்கியுள்ளன. கட்டிட நிர்மாணப்பணிகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சியில் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவரும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் அடுத்த ஆண்டு தை மாதத்தில் இப்புதிய கட்டிடத்தொகுதியில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், ஆ.புவனேஸ்வரன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வே.பிரேமகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

வடக்கு மாகாணத்தின் நிர்வாகத் தலைநகராக மாங்குளம் அமைய வேண்டும் என்றும், வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலகம் மாங்குளத்தில் இயங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு முன்னோடியாக வடக்கு விவசாய அமைச்சு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனையை மாங்குளத்துக்கு நகர்த்த முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts