Ad Widget

மாகாண சபை முறைமை நீக்கப்படக் கூடாது – சி.வி.கே.

தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை நீக்கப்பட கூடாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபை முறைமை என்பது ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்று. தனியே அது வடக்கு கிழக்குக்கு மட்டும் உருவாக்கப்படவில்லை.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்றே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் அந்த மாகாண சபை முறைமைகூட போதாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நாம் கூறி வருகின்றோம்.

ஏனெனில் மத்தியில் மட்டும் அதிகாரங்கள் நாட்டுக்கு நல்லதல்ல நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்திற்கு நல்லது அல்ல.

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

எனினும் மாகாண சபைகளைகு்கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நாட்டில் மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் முழு அதிகாரங்களும் மத்தியில் குவிந்தால் ஏனைய இனத்தவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே சரத் வீரசேகர போன்றவர்களின் கருத்துக்கள் நாட்டின் ஐனநாயகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts