Ad Widget

மாகாண சபைகளை புறக்கணித்து தீர்மானம் எடுப்பதை கண்டிக்கிறேன்

மாகாண சபையைப் புறக்கணித்து மக்கள் சார்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியல் மட்டத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை நிர்வாக மட்டத்தில் எடுப்பது மக்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

உதாரணமாக அரசாங்க அலுவலர்கள் இராணுவத்திற்குப் பயந்து மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்குவது மக்களைப் பாதிக்கின்றது என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

இராணுவத்துடன் அரச அலுவலர்கள் முரண்பட முடியாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், இது தொடர்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே செய்ய வேண்டும் என்றும், அடிமட்ட மக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள மாகாண சபை உறுப்பினர்களே மக்களின் உண்மையான நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்தவர்கள் என்றும், எனவே, மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் செவிசாய்த்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அதிகார மையங்களாகிய மத்திய அரசும், மாகாண அரசும் இணைந்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், மாகாண சபையினரைப் புறக்கணித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நடத்த முடியாது என்றும் மாகாண சபையினருடைய ஒத்துழைப்புடனேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

Related Posts