Ad Widget

மஹிந்த மாளிகை அமைத்தபோது தமிழர்கள் பொறுமை காத்ததே பெரிய விடயம்! – சிங்களவர்களாக இருந்தால் விரட்டியிருப்பார்கள் என்கிறார் பிரதமர்

சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அந்த மக்கள் எம்மை நாட்டிலிருந்து விரட்டியிருப்பார்கள். ஆனால், யாழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகை அமைத்தபோதும் தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்ததே பெரிய விடயம். – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ranil

தமது வீடுகளைக் கேட்டுப் போராடும் தமிழ் மக்கள் மீது நாம் குற்றம்கூறமுடியுமா என்றும் கேள்வி அவர் எழுப்பினார்.

கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi – Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

மஹிந்த அரசின் மோசடிகள் பல உள்ளன. இது தொடர்பில் நாம் விசாரணைசெய்து வருகின்றோம். இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, திறைசேரி, கணக்காய்வாளர் திணைக்களம் என்பன தமது கடமைகளை நிறைவேற்றவில்லை.

இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நாம் இந்த ஊழல், மோசடி குறித்து விசாரணை நடத்திவருகின்ற நிலையில், நாம் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றோம் என்று கூறுகின்றனர். இடம்பெற்றுள்ள மோசடிகளைக் கண்டுபிடிக்க நாம் மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்து எவரும் பேசுவதில்லை.

நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதனால், இந்த வேலைகளை நாடாளுமன்றம்தான் செய்யவேண்டும்.

இதேவேளை, மஹிந்த அரசு யாழில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகையொன்றை அமைத்துள்ளது. இதுபோன்ற அரச மாளிகையை எமது மக்கள் வாழும் இடங்களில் அமைக்க முடியாது. அப்படிச் செய்தால் சிங்கள மக்கள் எம்மை நாட்டைவிட்டு விரட்டியிருப்பார்கள். தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்தது பெரிய விடயம் – என்றார்.

தொடர்புடைய செய்தி

யாழில் மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையைப் பார்த்து வாய் பிளந்து நின்ற பிரதமர் (Photos)

Related Posts