மஹிந்த கால படுகொலைகள் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் பொது எதிரணி காணாமல் போகும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளிப்படுத்துவோம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விரைவில் வீழ்த்துவோம் என மஹிந்த ஆதரவு பொது எதிரணி கூறி வருகின்ற நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மே தினத்தில் கொழும்பு காலி முகத்திடலில் கூடும் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை பொது எதிரணி வீழ்த்திவிடும் என்று கூறியுள்ளமையானது, அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வெள்ளம் தங்கள் கூட்டத்திற்கு படையெடுக்கும் என பொது எதிரணி கூறி வந்தாலும், அதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் மக்களின் ஆதரவு அரசாங்கத்திற்கே உண்டு எனவும் ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts