முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணமல்போன பலர் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
எனினும், குறித்த நபர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை எனவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தலைக் கண்டித்து கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அருட்தந்தை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இதன் பின்னர் மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் வெள்ளைவான் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இதில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், இளைஞர்கள் கடத்தப்படுகின்றார்கள்.
இந்த நடவடிக்கையானது மீண்டும் நாட்டில் யுத்தத்தைத் தூண்டும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது.
இதேவேளை காணாமல்போனவர்கள் தொடர்பான பூரண விசாரணைகள் இதுவரை நடத்தப்படவில்லை.
முன்னைய ஆட்சியைப் போன்றே நல்லாட்சி அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெறுவது முன்னைய அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதையே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது என அருட்தந்தை சக்திவேல் மேலும் குறிப்பிட்டார்.