Ad Widget

மஹிந்த அரசை வெளியேற்றவே, மைத்திரிக்கு ஆதரவளிக்கின்றோம் – சூசையானந்தன்

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அரசுடன் சேர்ந்திருந்து செயற்படும் போது தமிழ்மக்களுக்காக ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்பதை நாம் மறக்கவில்லை.

ஆனால், மஹிந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டியுள்ளதால், நாங்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்கிறோம் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன் இன்று வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.

susai-yananthan

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது தொடர்பில் சூசையானந்தன் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் வசந்தம், மஹிந்த சிந்தனை என்பன தமிழர்களுக்கு கொள்ளி வைக்கின்ற செயல்களாகும். தமிழில் பாடிய தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடச் சொன்னதுதான், மஹிந்த அரசு தமிழர்களுக்கு வைத்த முதல் கொள்ளி. எமது பிள்ளைகள், தேசிய கீதத்தில் என்ன சொல்லப்படுகின்றது என்பது தெரியாமலே இருக்கிறார்கள்.

பல நில ஆக்கிரமிப்புக்களையும் இந்த அரசே மேற்கொண்டது. யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக பல பகுதிகளை ஆக்கிரமித்து வலி.வடக்கு போன்ற பகுதிகளில் குட்டி இராணுவ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் தமிழ்மக்களுக்கு எதிரானவர் அல்ல என்று தேர்தல் பிரச்சாரங்களில் கூறுகின்றார். அப்படியானால் அவர் செய்த இந்த செயல்கள் எந்தவகையில் தமிழ் மக்களுக்கு சார்பானது.

திரும்பும் திசை எல்லாம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் சிங்கள மொழியில் தான் முறைப்பாடு செய்யலாம்.

சந்திகள் தோறும் இராணுவம் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர். வெற்றியின் சின்னங்கள் எனக்கூறி எமது நிலங்கள் பல இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அச்செயல் எமக்கு அசிங்கத்தை தருகின்றது.

கடல் வளங்கள் தென்னிலங்கையினராலும் இந்தியர்களாலும் சுரண்டப்படுகின்றது. யாழ்.தேவி, தமிழ் மக்களுக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது முப்படைகளுக்குமாக கொண்டு வரப்பட்டதா?

இவையெல்லாம் அபிவிருத்தி அல்ல எமது மக்களை சூறையாடும் செயற்பாடாகும். இனியும் இவற்றை மஹிந்த அரசு தொடருமானால் பாக்கு நீரிணைக்குச் சென்று மூழ்க வேண்டிய நிலை ஏற்படும்.

மைத்திரி அரசும் இதேபோன்ற அரசு தான். அவர் அரசுடன் இருக்கும் போது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆனால் மஹிந்த அரசை அகற்ற வேண்டும் என்பதற்காகவே அவருக்கு வாக்களிக்க வேண்டியுள்ளது. இது தமிழர் நாம் மைத்திரிக்கு கொடுக்கும் சந்தர்ப்பம். அவரும் இதே செயற்பாடுகளை மேற்கொண்டால் இனிவரும் தேர்தலில் அவரையும் நாம் நீக்குவோம்.

நாங்கள் எதிர்பார்க்கும் ஐனாதிபதி எமக்கு அதிகமாக எதையும் செய்யாவிட்டாலும் தமிழ்மக்களின் காணி, கடல் வளங்கள் பறிக்கப்படாமல் சுயகௌரவத்தோடு வாழ்வதற்கு தடை விதிக்காத அரசாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts