Ad Widget

மஹிந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஜே.வி.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும், இதுவரை காலமும் தமது பிரச்சனையை வெளியிடாது மௌனமாக இருந்த அனைவரும், தமது முறைப்பாடுகளை மக்கள் விடுதலை முன்னணியின் நீதி வழங்கும் குழுவிடம் அறியத்தருமாறு மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.

jvp

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசியல் ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கம் ஊழல் நிறைந்தது. அத்துடன், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து மக்களின் சுதந்திரத்தை பறித்த அரசாங்கம் ஆகும். வடபகுதி மக்களை பாரிய இன்னல்களுக்கு உள்ளாக்கி ஊடக அடக்குமுறை, நாடு கடத்தல், படுகொலை போன்ற செயற்பாடுகளை பாரிய அளவில் நடத்தி அனைவரின் சுதந்திரத்தையும் பறித்தார்கள்.

அவர்களின் சர்வாதிகாரம் நிறைந்த குடும்ப ஆட்சியை கலைத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதுக்கு முழு மூச்சாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது.

அதேபோல், தற்போதுள்ள அரசாங்கத்திலும் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய அரசாங்கம் இடைக்கால அரசாங்கம், 100 நாட்கள் கொண்ட குறுகிய அரசாங்கம். நெருக்கடி நிறைந்த சிக்கலான நாடாளுமன்றம். எனவே, மக்களாகிய நாம் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதன் மூலம் தான் எமது பிரச்சனைகளை தீர்த்து உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். கடந்த கால அரசியலில் ஜனாதிபதி, முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த ஊழல்கள், அவர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உரிய முறையில் எமக்கு தெரிவிக்கவும்.

அத்துடன் காணிகளை இழந்த மக்கள் உடமைகள் மற்றும் வியாபார நிலையங்களை இழந்தோர், மாணவர்கள், அதிகாரிகள், அரச ஊழியர்கள், இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள், கொலை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், விளையாட்டுத்துறை, கலைஞர்கள் மற்றும் ஏனைய துறையினர் முகம்கொடுத்த பிரச்சனைகள் தொடர்பான விபரங்களை இல 43/20 நுகஹ பிளேஸ், பிலியந்தலை வீதி மகரகம என்ற முகவரிக்கும் வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் சின்னத்துரை இராஜேந்திரன்- 0770712430, அம்பலவாணர் கணபதிப்பிள்ளை- 0779480208, இராமலிங்கம் சந்திரசேகர் – 0777795958 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகளை மேற்கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.

அத்துடன் மார்ச் மாதம் 7ஆம் திகதி யாழ். நகரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸ்ஸா நாயக்க தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளளோம்.

சகல பிரதேசங்களுக்கும் சென்று எமது செயற்பாடுகளை எமது குழுவின் ஊடாக விபரங்களை சேகரித்து அரசியல் தலைவர்கள் ஊடகவும் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Related Posts