Ad Widget

மஹிந்தவின் போர் வெற்றி இனி இராணுவத்துககான பாராட்டு விழா!

தமிழீழ விடுதலைப்டிபுலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணியரசு தீர்மானித்துள்ளது.

Ranil - maithri

இதன் பிரகாரம் மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட ‘போர் வெற்றி விழா’வானது பெயர் மாற்றத்துடன் ‘இராணுவ பாராட்டு விழா’வாக புதிய ஆட்சியிலும் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

“புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பங்களிப்பு வழங்கிய முப்படை, பொலிஸ், சிவில் படையணி ஆகியவற்றைக் கெளரவிப்பதற்கும், இதன்போது உயிரிழந்த முப்படை, பொலிஸ், சிவில் படையணிகளின் அதிகாரிகளை நினைவுகூரவும் 2009 இல் இருந்து வருடாந்தம் மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்ததோர் தினத்தில் நடைபெறும் யுத்த வெற்றி விழா பேரணியை இவ்வருடத்தில் இராணுவ பாராட்டு நிகழ்வாக நடத்துவது பொருத்தமாக இருக்கும்” – என்ற பிரேரணையை பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18ஆம் திகதியை மஹிந்த அரசு சுதந்திர தின நிகழ்வுக்கு ஒப்பான வகையில் கடந்த காலங்களில் கொண்டாடி வந்தது. இது இன நல்லிணக்கத்துக்குப் பெரும் சாபக்கேடு என்று ஜே.வி.பி. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டின.

அத்துடன் இவ்வாறான நிகழ்வுகள் தேவையில்லை என்றும் கூறி வந்தன. தற்போதைய ஆட்சியில் பிரதான பங்காளராக இருக்கும் ஐ.தே.க.கூட அன்று மேற்படி நிலைப்பாட்டிலேயே இருந்தது. எனினும், போர் முடிவுக்கு வந்த தினத்தில் அரசு கொண்டாடும் வகையில் ஆட்சி மாற்றத்தின் பின்பும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை கவலையளிப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுதந்திர தினத்தில் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களையும், இராணுவத்தையும் கெளரவிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும், எனவே, இதற்குப் பிறிதொரு நிகழ்வு தேவையில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ பாராட்டு விழா மே மாதத்தில் நடைபெறும் என மைத்திரி அரசு அறிவித்தாலும், அது எவ்வாறு கொண்டாடப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts