Ad Widget

மஹிந்தவின் புதிய தேர்தல் வாக்குறுதி!

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் “எதிர்காலத்திற்கான உத்தரவாதம்” என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28) காலை வௌியிட்டு வைக்கப்பட்டது.

இதில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ,

செயலிழந்திருந்த நாட்டை செயல்படக்கூடிய நாடாக தாம் மாற்றியமைத்ததாக தெரிவித்தார்.

நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வியாபாரிகளுக்கு பல சலுகைகள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக 50,000 ரூபா வரையில் வழங்குவதாகவும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபா வரையில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தை 6,000 ரூபாவாக உயர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 25,000 ரூபாவாக உயர்த்துவதுடன் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 3,000 ரூபாவினால் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படுவதுடன், அனைத்து வீடுகளுக்கும் ப்ரோட்பேண்ட் (Broadband) வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதனூடாக இளைஞர் யுவதிகளை இணைய யுகத்திற்கு அழைத்துச்செல்ல எதிர்பாரப்பதாகவும், அவர்களின் பங்களிப்புடன் நாட்டை நவீன யுகத்தை நோக்கி பயணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிடும் இன்றைய நிகழ்வில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts