Ad Widget

மல்லாகத்தில் 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு

யாழ். மல்லாகம் காட்டுத்தரை (ஜே – 213) கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் இன்று புதன்கிழமை (10) தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் எஸ்.நந்தகுமார் மேலும் தெரிவிக்கையில்,

இதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருடன் சென்று கிணறுகளை பார்வையிட்டு நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி மக்கள் தங்கள் குடிநீருக்கான நீரை, எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதி தவிர்ந்த பழம்பிள்ளையார் ஆலயம், காட்டுத்தரை முருகன் ஆலயம் ஆகியவற்றின் கிணறுகளில் பெற்று வருகின்றனர்.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு தென்பட்டது.

அருகிலிருந்து கிணறுகளுக்கு ஏற்பட்ட எண்ணெய் கசிவுகள் தற்போது, மின் பிறப்பாக்கி அமைந்துள்ள வளாகத்தை சூழவுள்ள 5 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவி மல்லாகம், ஏழாலை, கட்டுவன் ஆகிய பகுதிகளுக்கும் படிப்படியாக பரவியுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நொர்தேன் பவர் நிறுவனம், மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்து அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது மல்லாகம் காட்டுத்தரை பகுதியிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் நீர்த்தாங்கியொன்றை வைத்து அம்மக்களுக்கான குடிநீரை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

Related Posts