Ad Widget

மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றய தினம்
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

எமது நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்து வந்துள்ள தேயிலை
ஏற்றுமதித் தொழில்துறையை தமது தோள்களில் சுமந்து வந்துள்ள தொழிலாளர்களின்
வாழ்வு இன்னும் இருளுக்குள்ளேயே இருந்து வருகின்றது. வெள்ளைக் காரர்கள்
ஏற்படுத்திய லயன் குடியிருப்புக்களே இன்னும் அவர்களின் வாழ்விடங்களாக
இருந்து வருகின்றதுன. முதலில் லயன் குடியிருப்புக்கள் இல்லாதொழிக்கப்பட
வேண்டும்.

மலையகத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட
வேண்டும். மண் சரிவுகளின் போதும், வேறு அனர்த்தங்கள் இடம்
பெறுகின்றபோதும் மட்டும், லயன் குடியிருப்புக்களை மாற்றுவதாகவும், தனி
வீடுகள் அமைத்துத் தருவதாகவும் பலராலும் பல வாக்குறுதிகள் கொடுக்கப்
படுகின்றன. ஆனால,; அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை.
அனர்த்தங்கள் இடம் பெறுகின்ற லயன் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல்,
லயன் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்து
கொண்டிருக்கின்ற அனைவரின் இன்னல்களும் தீர்க்கப்பட வேண்டும்.

அரசாங்கம், தேயிலைக் கம்பனிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய
அமைப்புக்கள் இந்த தனி வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு பங்களிப்புச்
செய்ய வேண்டும். தோட்டக்குடியிருப்புக்கள் கிராமங்களாக மாற்றியமைக்கப்பட
வேண்டும். கிராமங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கும்
குடியிருப்புக்கள் அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் பிள்ளைகளின்
கல்வி, சுகாதாரம் என்பனவும் கிராமங்களில் இருப்பதைப் போல் அமைத்துக்
கொடுக்கப்பட வேண்டும்.

தோட்ட லயன் குடியிருப்புக்கள் தனியாகவும், கிராமங்கள் தனியாகவும்
இ;ருப்பதால் தமிழ், சிங்கள மக்களிடையே ஒரு இடைவெளி
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் இருதரப்பு மக்களிடையேயும் அடிக்கடி
ஊர்ச் சண்டைகளும், வன்முறைகளும் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.
தேசிய நல்லிணக்கத்தை முன்னிறுத்தி செயற்பட்டுவரும் அரசாங்கமானது,
தோட்டங்களில் வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும்,
புறக்கணிப்புக்களையும், தனிமைப்படுத்தல்களையும் இல்லாதொழித்து தோட்ட
மக்களையும், கிராம மக்களையும் இணைத்து புதிய அத்தியாயத்தை தொடக்கி வைக்க
வேண்டும்.

வெயில், மழை, பனி என எல்லாக் காலங்களிலும், எல்லாப் பொழுதுகளிலும்,
அட்டைக்கடிக்கு மத்தியிலும் தமது வாழ்க்கையை தேயிலைச் செடிகளுக்கடியிலேயே
தொலைத்து வாழும் மலையகத் தமிழ் மக்கள் தமக்கு நாளாந்தச் சம்பளமாக 1000
ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து
வருகின்றார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை கம்பனிகள் ஏற்றுக் கொள்ளத்
தயங்குகின்றன.

சொந்த தோட்டங்கள் வைத்திருப்போர், ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தை
கம்பனிகளுக்கு 65 ரூபாய்க்கு கொடுக்கின்றார்கள். ஆனால் கம்பனிகளின்
தோட்டங்களில் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு தொழிலாளிக்கு
கம்பனிகள் 18 ரூபாவையே கொடுக்கின்றன.

சுமார் ஐந்து கிலோ தேயிலையை பயன்படுத்தி ஒருகிலோ தேயிலையை உற்பத்தி
செய்தாலும், தேயிலையின் சந்தைப் பெறுமதியானது சராசரியாக 400
ரூபாய்களுக்கு விற்பனை செய்வதாலேயே தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை தினக்
கொடுப்பனவாக வழங்க முடியாது என்று கம்பனிகள் கூறுகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிப்புச் செய்ய
முடியாது. எனவே கம்பனிகளின் வசமிருக்கும் காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்க
வேண்டும். தொழிலாளி ஒருவருக்கு குறைந்தது ஒரு ஏக்கர் தேயிலைக்காணியை
வழங்கினால், அந்தக் காணியிலிருந்து குறைந்த பட்சமாக மாதமொன்றுக்கு 50
ஆயிரம் ரூபாவை வருமானமாக பெற்றுக் கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாமல், பராமறிப்பற்றும், அபிவிருத்தியற்றும் தோட்டங்களை
தனியே இலாபங்களை மட்டுமே எதிர்பார்க்கின்ற இடங்களாகவே கம்பனிகள்
பார்க்கின்றன. அதே காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்கினால் அவர்கள் அந்த
நிலங்களை அபிவிருத்தி செய்தும், சீராகப் பராமறிக்கவும் செய்வார்கள்.

அதேபோல் தேயிலைத் தோட்டக்காணிகளில் குறுகியகால இலாபங்களுக்காக கிழங்கை
உற்பத்தி செய்கின்றனர். இதனால் உடனடி இலாபங்களை கம்பனிகள் ஈட்டினாலும்,
நீண்ட காலத்தில் அந்த நிலம் பிடிமானத்தை இழந்து விடுகின்றன. சரிவுகள்
போன்ற மண் சரிவுகளுக்கு இந்த இடங்களே அதிகமாக உட்படுகின்றன என்பதையும்
கவனத்தில் கொண்டு அவற்றைத் தடுக்க வேண்டும்.

உலக சந்தையில் தரமான தேயிலையாக இருந்து வந்துள்ள நமது தேயிலையின் தரம்
தற்போது கேள்விக்குள்ளாகி வருவதாக தெரியவருகின்றது. அதற்குக் காரணம்
இலங்கையில் தேயிலைச் செடிகளை காலத்துக்குக் காலம் முறையாக மீள் நடுகை
செய்யும் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததேயாகும். மீள் நடுகைக்காக
அரசாங்கம் ஒதுக்குகின்ற நிதி போதாது என்பது ஒருபுறமிருக்க, மீள் நடுகைத்
திட்டத்தை கட்டாயமாக கம்பனிகள் அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் தரமான கொழுந்துகளை பெற்றுக் கொள்ளவும், தரமான தேயிலையை உலக
சந்தையின் சவால்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்யவும் முடியும்.

இவை தேயிலைச் செய்கைக்கு பொருத்தமற்றதாக இருக்கக் கூடிய ஒதுக்கப்பட்ட
ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளில் மண் சரிவுகளைத் தடுக்கவும், தண்ணீரைச்
சேமிக்கவும் அந்தக் காலத்தில் நடுகை செய்யப்பட்ட பயன்மிகுந்த மரங்களை
தற்போது கம்பனிகள் வெட்டி விற்பனை செய்து பெரும் இலாபங்களை பெற்று
வருகின்றன. ஆனால் மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை
அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. அவ்வாறாக காணிகளையும் அரசாங்கம் இனம்
கண்டு அதை பயன்படுத்தும் வகையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.

தரவு ஒன்றின்படி 22 கம்பனிகளில் 8 கம்பனிகள் மட்டுமே இலாபத்தில்
இயங்குவதாக தெரியவருகின்றது. ஏனைய கம்பனிகள் நஷ்;டத்திலே இயங்குகின்றன
என்று தெரியவருகின்றது.

கம்பனிகளின் திட்டமிடல் மற்றும் நிர்வாக திறனின்மை காரணமாக கம்பனிகள்
மட்டும் நஷ்;டத்தில் விழவில்லை. அதை நம்பியிருக்கும் தொழிலாளர்களும்,
அவர்கள் வசமிருந்த நிலங்களும் பாதிக்கப்படுகின்றன என்பதை நாம்
எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பையும், இயற்கையின் வெகுமதியையும் சுரண்டிக்
கொள்ளையடித்து வருகின்ற அவலத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் தேவையான
நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் தமது வருடாந்த
கணக்கில் ஒரு தொகைப் பணத்தை தொழிலாளர்களின் மருத்துவம், சுகாதாரம்,
மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு செலவிடுவதாக குறிப்பிடுகின்றன.
ஆனாலும் அந்த மக்களின் வாழ்க்கை மாறவில்லை.

மலையகத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருந்தபோதும், அவர்களை இந்திய
வம்சாவாளயினர் என்றே பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் பதிவு
செய்யப்படுவதில் காணப்படுகின்ற முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்திற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து உழைக்கும்
மலையக மக்களுக்கு தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு,
அவர்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கவும், அவர்களின்
பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

நாட்டில் குறைந்த கொடுப்பனவில் வேலையாட்களை தேடுவோர் மலையக இளைஞர்,
யுவதிகளையே தேடுகின்றார்கள். அப்படி வேலையில் அமர்த்தப்படும் இளைஞர்,
யுவதிகளின் காப்புறுதி, பாதுகாப்பு, முறைகேடுகளற்ற கொடுப்பனவு என்பவற்றை
கண்காணிக்கவும், உதவவும் விஷேட பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதும், அதை
பாராளுமன்ற கென்சாட்டில் பதிவு பண்ணுவதும் மட்டும் அந்த மக்களின்
வாழ்வில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தாது.

மலையக மக்களுக்கு தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டுமென்ற
விருப்பங்களை சுமந்து நிற்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
நிறைந்திருக்கும் இந்தச் சபையில் மலையக மக்களின் குரலுக்கும்
கோரிக்கைக்கும் வலிமை சேர்க்கும் ஒரு வாய்ப்பாகவே இன்றைய எனது உரையை
கருதுகின்றேன்.

இத்தகைய நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணியின்
பாராளுமன்ற உறுப்பினர் அணுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related Posts