Ad Widget

மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது!

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர்.

கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது.

-malaysian-airlines

அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் கடந்த 2 மாதங்களாக விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

ஆனால், மாயமான விமானம் குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், விமானம் மாயமான பிறகும் தொடர்ந்து மிகவும் கட்டுப்பாடான முறையில், பல மணி நேரம் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது எந்தவிதமான சேதமும் அடைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது பறந்தபோது எரிபொருள் தீர்ந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமான விசாரணை முடிவைத் தொடர்ந்து தற்போது தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் தேடுதல் பகுதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசிய ராணுவ ரேடார் தகவல்களை வைத்து தற்போதைய முடிவுக்கு விசாரணையாளர்கள் வந்துள்ளனர். மேலும், இன்மார்சாட் செயற்கைக் கோள் தகவல்களின் அடிப்படையிலும் இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

முன்னதாக 239 பேருடன் பறந்த அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தாய்லாந்து வளைகுடாவுக்கு மேலே பறந்தபோது அது ரேடாரின் பார்வையில் சிக்கியுள்ளது. இது திட்டமிடப்படாத பாதையாகும். அதன் பின்னர் அந்த விமானம் மலேசிய தீபகற்பத்தைக் கடந்து மலாக்கா ஜலசந்திப் பகுதியில் பறந்துள்ளது. அதன் பின்னர் ரேடார் பார்வையிலிருந்து மறைந்து இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மீது பறந்துள்ளது.

இதன் அடிப்படையில் அந்த விமானம் மலாக்கா பகுதியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்து தவறு என்றும் இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்து பின்னர் விழுந்திருப்பதாக பின்னர் தகவல்கள் வெளியாகின. அங்கு தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டது.

இந்த நிலையில்தான் இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்தபோது பல மணி நேரத்திற்கு விமானம் தொடர்ந்து கட்டுப்பாடான முறையில் பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில புதிய பகுதிகளுக்கு தேடுதல் வேட்டை மாற்றப்பட்டுள்ளது. புதிய பகுதியானது 400 மைல்கள் நீளமும், 60 மைல் அகலமும் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

Related Posts