மலிவு விலைகளில் கூட்டுறவுச் சங்கங்களூடாக அத்தியாவசிய பொருட்கள்!

உள்நாட்டுத் தொழில்களை பலப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சமாசம், லங்கா சுகர் கம்பனி மற்றும் பி.சி.சி லங்கா நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கைத்தொழில் அமைச்சு இந்நிறுவனங்களுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்நிகழ்வு அண்மையில் நாரஹேன்பிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இப்புதிய திட்டத்தின் கீழ், லங்கா சுகர் நிறுவனம் மாதத்திற்கு 1,000 மெட்ரிக் தொன் சிவப்புச் சர்க்கரையை விநியோகிக்கவுள்ளதுடன், பி.சி.சி லங்கா நிறுவனம் மாதத்திற்கு 20,000 லீட்டர் போத்தல்களில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், சோப் மற்றும் ஏனைய உள்நாட்டு தயாரிப்புகளை வழங்கவுள்ளது.

இந்தப் பொருட்கள் நாடு முழுவதிலும் உள்ள 75 நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக, 3,500 க்கும் மேற்பட்ட பிரதேச கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும்.

தேவையற்ற இடைத்தரகர்களைத் தவிர்ப்பதன் மூலம் சந்தை விலையை நிலையாக வைத்திருக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்களை வழங்கவும் கூட்டுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதுள்ள 3,500 விற்பனை நிலையங்களை 2029 ஆம் ஆண்டிற்குள் 10,000 ஆக உயர்த்துவதற்கு COOPFED திட்டமிட்டுள்ளதுடன், இந்திய கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து உயர்தரப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Posts