எரிபொருள் விலையில் திருத்தம்?

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலை திருத்தம் ஒன்று அறிமுகப்படுத்தப்படலாம் என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பல எரிபொருள் விநியோக நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் தற்போது எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே விற்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாகப் பல தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாத்திற்குத் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சினை தொடர்பில் உரிய முடிவு எடுப்பதற்கு முன்னர், குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் எனவும் அவர் மேலும் கூறினார். எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில், கடந்த காலங்களைப் போன்றே அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது எரிபொருள் விலை குறித்து உரியதொரு முடிவை எடுப்பது உள்ளிட்ட பல தெரிவுகள் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts