Ad Widget

மருத்துவர் சிவசங்கர் விடயத்தில் மருத்துவர் சங்கம் மௌனமா?

அநுராதபுர இரத்தவங்கியில் கடமையாற்றும் வைத்தியரும் உதயன் நாளிதழின் பத்தி எழுத்தாளருமான வைத்தியர் இரத்னசிங்கம் சிவசங்கர் கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்..கிளிநொச்சியில் புதிதாக இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்த பெண்களின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் 4நாட்கள் பொலிஸாரின் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.இந்நிலையில் 2.1.2013 இவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்செய்யப்படுவார் என நம்பப்பட்டது. எனினும் விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும், நீதிமன்றிற்க்கு கொண்டுசெல்வதற்கு வாகனவசதி இல்லை எனவும் கூறிய காவற்துறையினர் நீதிமன்றில் ஆஜர்செய்ய முடியாது என கூறியிருந்தனர்.

எனினும் அன்றைய தினமே மாலை இரகசியமான முறையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன்னால் வைத்தியரை ஆஜர்படுத்திய காவற்துறையினர் தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தும் உத்தரவினைப் பெற்றிருக்கின்றனர்.

இலங்கை அரச மருத்துவர் சங்கத்தின் முன்னாள் யாழ்ப்பாணக் கிளைத் தலைவராகிய டாக்டர் சிவசங்கர், கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தாய்ச் சங்கத்திற்கு யாழ் அரச வைத்தியர் சங்கத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தாங்கள் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருப்பதாகவும், அரச மருத்துவர் சங்க வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.

எனினும் இந்தவிடயம் குறித்து இலங்கை வைத்தியர் சங்கம் பெரியளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் தனிப்பட்ட முறையில் வைத்தியர்கள் தாக்கப்படும் வேளைகளில் எல்லாம் குரல் கொடுத்த வைத்தியர் சங்கம் தற்போது பெரியளவில் குரல்கொடுக்கவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாகப் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமது உறவினரான யுவதி ஒருவர் தொடர்பிலேயே கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள புதிதாகப் பெண்களை இராணுவத்திற்குச் சேர்த்த பகுதிக்குள் ஞாயிறன்று அத்துமீறி நுழைந்ததாக விசாரணைகளில் இருந்து அறிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.முகாமுள் நுழைந்த இவர் படையில் பெண்களை சேர்ப்பது குறித்து கேள்வியெழுப்பியதாகவும், இவரது அத்துமீறல் குறித்து சந்தேகம் கொண்ட படையினர் உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.அத்துடன் ணலிப்பதிவுக்கருவிகளை தன்னுடன் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது இதனப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த இவர் பொய்யான காரணங்களைக் காட்டிக்கொண்டு புதிதாகப் படையில் சேர்க்கப்பட்ட யுவதிகளின் பயிற்சிநெறியைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர் முன்னதாக யாழ். வைத்தியசாலையிலும் கடமையாற்றி உள்ளார்.

போலிக் காரணங்களைக் காட்டிக் கொண்டு முகாமுக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே இவர் தடுத்து வைக்கபட்டு விசாரிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகக சூரிய தெரிவித்துள்ளார்.தற்போது மாங்குள முகாமில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர்.எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் நேற்றுப் பிற்பகல் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.

எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெற்றோருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து நேற்று மாலை குறித்த பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்தனர் என சுயாதீனச்செய்திகள் முன்னர் தெரிவித்திருந்தன.

மருத்துவர் சிவசங்கர் மிகவும் நேர்மையானவர் என அறியப்பட்டவர். எதனையும் ஒழிவு மறைவு இன்றிப் பேசுபவர், எழுதுபவர். மருத்துவர் சிவசங்கர் அவர்களினாலேயே வடபகுதியின் உளநல ஆற்றுப்படுத்தும் நிறுவனமான சாந்திகம் 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இவர் தெல்லிப்பளை வைத்தியசாலையின் உளநலப்பிரிவில் பெரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றினார் என்றும் வடபகுதி உளநலச் சங்கத்தினை ஆரம்பித்தார் என்றும் பின்னர் யாழ் இரத்த வங்கியில் கடமைப் பொறுப்பேற்று அதனை இக்கட்டான காலத்தில் திறம்பட இயக்கினார் என்றும் இவரை நன்கு தெரிந்தவர்கள் கூறுகின்றனர்

நேர்மை மிக்க இவர் ஏனையவர்களும் நேர்மையுடன் கடமைபுரிய வேண்டும் என விரும்பினார் எனவும் வேலை செய்யாது மேலதிக கொடுப்பனவு பெறும் செயற்பாட்டினை நிறுத்தினார் எனவும் இதனால் தான் அவரை அங்கிருந்து அகற்றினர் என்றும் இவருடன் நெருங்கிப்பழகியவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமூகத்தில் ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் போது அவரது குரல் இன்று அடைக்கப்பட்டு உள்ளது.இவரது கைதும் தடுப்பும் மனித உரிமைகளை பேணுபவர்களிற்கு அதிர்ச்சினைக் கொடுத்து உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டணம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கைது செய்யபட்டதாக கூறப்படும் மருத்துவர் சிவசங்கர் அண்மையில் வடமாகாண ஆளுனர் சந்திர சிறியினால் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். எச்சரிக்கையுடனான விசாரணையாக அது இருந்தது எனச் சிவசங்கர் கூறியிருந்தார். அந்த விசாரணையின் பின்பும் சங்கரின் அடுத்த கட்டுரை பிரசுரமாகி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் பலமாக இருந்த போது நியாயத்திற்காக எப்படி போராடினாரோ அதே மனநிலையில் தான் உண்மைக்காகவும் நியாயத்திற்காகவும் இப்போதும் சிவசங்கர் குரல் கொடுத்து வருகிறார் எனவும் விடுதலைப் புலிகள் பலம் பெற்று விளங்கிய காலத்தில் ஈ பீ ஆர் எல் எவ் இன் மத்திய குழு உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் மிக முக்கியமானவரான சுபத்திரன் விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட போது அதனை வன்மையாகக் கண்டித்தவர் வைத்தியர் சிவசங்கர் எனவும் அறியவருகின்றது. அதற்கு எதிராக இவர் எழுதிய குறிப்பை அன்று யாழ் பத்திரிகைகள் வெளியிட மறுத்த போது தனது பணத்தைச் செலுத்தி விளம்பரமாக தனது குறிப்பை பிரசுரித்தவர் எனவும் தெரியவருகிறது.

யாழ் இந்துக்கல்லூரி பழையமாணவரான சிவசங்கர் அவர்கள் தனது பல்கலைக்கழக காலத்திலேயே சமூக பிரச்சனைகளில் அதிகம் அக்கறை கொண்டவராக இருந்தார். இயக்கங்கள் மக்களது நலன்களுக்க எதிராக செயற்பட்டபோது அவற்றை பகிரங்கமாக விமர்சிக்வும் தயங்கியதில்லை. இதனால் அவ்வப்போது ஆதிக்கம் செலுத்திய இயக்கங்களுக்கும் சிவசங்கருக்கும் இடையிலான உறவானது சற்று நெருக்கடியானதாகவே இருந்தது. சில வேளைகளில் ஆபத்தானதாகவும் கூட இருந்தது. அதேவேளை ஏதாவது இயக்கங்கள் உண்மையிலேயே மக்களின் பிரச்சனைகளில் ஆக்கபூர்வமானதாக ஏதும் செய்தால் அவற்றை பகிரங்கமாக வரவேற்கவும் செய்தார்.

இதுதான் ஈ பி ஆர் எல் எப் ரொபர்ட் விடயத்திலும் நடந்தது. ரொபர்ட் எனப்படும் சுபத்திரன் ஈபிஆர்எல் அமைப்பின் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தில் செயற்பட்டபோது அவர் ஒவ்வொரு மாதமும் சமார் 20 தொடக்கம் 40 பேர் வரையில் யாழ் வைததியசாலைககு அழைத்துச்சென்று இரத்ததானம் செய்வித்து வந்தார். அப்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் இரத்த வங்கிக்கு பொறுப்பாக இருந்தவர் சிவசங்கர் .

அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த இரத்த தட்டுப்பாட்டு நிலைமையில் ரொபர்டினது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. மனித உயிர்களது விலைகள் மிகவும் அற்பமாக கருதப்பட்ட இந்த காலகட்டத்தல் இந்த பங்களிப்பானது ஒரு மிகவும் மனிதநேயம் மிக்க செயற்பாடாக கருதப்பட்டது.இதனால்தான் ரொபர்ட் கொல்லப்பட்டபோது தனக்கு ஏற்படக்ககூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது ரொபர்ட்டின் கொலை குறித்து கண்டண அறிக்கைளை விடுத்தார் என்று தெரியவருகிறது

Related Posts