Ad Widget

மருதனார்மட கொத்தணி சமூகத் தொற்றா?; வவுனியாவில் 4 பாடசாலைகள் மூடப்பட்டது ஏன்? – வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

கொரோனா இரண்டாம் அலையில் வடக்கில் 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பழையில் சமூகத்தொற்றாக மாறியுள்ளதா என்பதை அறிய பிசிஆர் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில நேற்று 424 பேருக்கு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த சந்தை வியாபாரிகள். மருதனார்மட சந்தை வியாபாரிகளுடன் தொடர்புடைய 39 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 422 பேரை அவர்களின் குடும்பங்களுடன் சுயதனிமைப்படுத்தியுள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேலைக்கோ, பாடசாலைக்கோ செல்ல முடியாது.

அடையாளம் காணப்பட்ட 39 தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள்ளை இனம்கண்டு அவர்களை பிசிஆர் சொதனைக்குட்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கிறோம்.

உடுவில், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய் பகுதிகளில் சமூகத்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான பிசிஆர் சோதனைகள் ஆரம்பித்துள்ளோம்.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 39 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் உடுவில் பிரதேச செயலகப் பகுதியில் மட்டுமற்றி யாழ்ப்பாணத்தில் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் தமது நாளாந்த தேவைகளுக்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மக்கள் மட்டுமன்றி ஏனையோரும் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். எனவே கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருடன் (சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும்.

அவ்வாறு தகவல் வழங்குவதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர அழைப்பெண்ணான 012 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் சந்தேகங்களுக்குரிய விபரங்களை தெரியப்படுத்துவீர்களாயின் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.

வவுனியாவில் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கு சிகிச்சைக்கு சென்றபோது, அறிகுறிகள் தென்பட்டதால் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதில் 25 வயது பெண் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர். திருநாவற்குளத்தை சேர்ந்த 65 வயது பொலிஸ் உத்தியோகத்தர், 15 வயதான பாடசாலை மாணவி ஆகியோர் தொற்றுடன அடையாளம் காணப்பட்டனர்.

சிசிரிஎம்.எஸ் பாடசாலைக்கு மாணவி சென்று வந்ததால் பாடசாலை மூடப்பட்டது. 65 வயதான பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகள் வவுனியா தமிழ் மகாவித்தியாலம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு சென்று வந்தனர். அதனால் அந்த பாடசாலைகள் மூடப்பட்டன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கும் அந்த மாணவர்கள் சென்று வந்ததால், அந்த நான்கு பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

புதிய சாளம்பை குளம் பகுதியில் 28 வயதான தாய், 5 வயது பிள்ளை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் கிராமத்தில் நெருங்கிப் பழகியிருந்ததால் அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது. அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா சிறைச்சாலையிலும் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை வடக்கு மாகாணத்தில் 55 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 43 பேர், வவுனியாவில் 9 பேர், கிளிநொச்சியில் 2 பேர், மன்னாரில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு தொற்று நோயியல் வைத்தியசாலையில் தற்போது 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Related Posts