Ad Widget

மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 39ஆக உயர்வு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அவர்களில் ஐவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 150 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே நேற்றையதினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை நபர், மருதனார்மடம் சந்தையில் முதலாவது தொற்றாளருடன் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை வியாபாரியின் மாதிரி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் அதன் முடிவு இன்னம் கிடைக்கவில்லையென பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.

Related Posts