Ad Widget

மருதடியான் ஆலயத்தில் மீண்டும் சிக்கல்!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. இந்நிலையில் கொடியேற்றத்தின் போது பின்பற்றப்படும் மரபை ஆலய நிர்வாகத்தினர் சிலர் பின்பற்றாது தவிர்க்க முயல்கின்றனர்.

இதனால் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் புறந்தள்ளி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

இந்த ஆலய கொடியேற்றத் திருவிழாவன்று கோயிலுக்கு அண்மித்ததாக இருக்கின்ற குறிப்பிட்டதொரு சமூகத்தவர்கள் கொடிச்சீலை வழங்குவதுடன் அன்றைய தினம் தர்ப்பை அணிந்து அர்ச்சகர்களுக்கு தட்சணை கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நீண்ட கால மரபாக உள்ளது.

ஆனால், திருத்த வேலைகளுக்காக ஆலயம் இடிக்கப்பட்டு, பலகோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பெருந்திருவிழாவுக்கான ஆயத்த ஏற்பாடுகள் ஆரம்பமான நிலையில் குறித்த சமூகத்தவர்கள் அந்த திருவிழா நடைமுறையை பின்பற்றுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சிலர் மறுப்பு தெரிவித்தனர்.

மரபைப் பின்பற்ற முடியாது என்றும் இறுக்கமாக அறிவித்தனர். இது தொடர்பாக குறித்த கொடியேற்ற உபயகாரர்கள் மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

தொன்றுதொட்டு நிலவி வந்த மரபில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்று நீதிவான் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் குறித்த ஆலய நிர்வாகத்திலுள்ளவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நேற்று பிற்பகல் தங்களுடன் முரண்பட்டனர் என உபயகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆலய நிர்வாகம் இந்த விடயத்தில் மென்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

Related Posts