Ad Widget

மரணச் சான்றிதழுக்குப் பதில் காணாமல்போனோர் படிவம்! நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு!!

காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. அதற்கான அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் மேற்படி தரப்பினருக்கு ‘மரணச் சான்றிதழ்’ வழங்குவதற்குப் பதிலாக ‘காணாமல் போனோர் சான்றிதழ்’ இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

காணாமல்போனோர் என சான்றிதழ் வழங்கப்பட்டவர் மீண்டும் இனங்காணப்பட்டால் குறிப்பிட்ட காலப்பகுதியில் அனுபவிக்காத சிறப்புரிமைகள் அவர்களுக்கு மீள வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஐ.தே.கவின் புத்திக பத்திரண எம்.பியால் கொண்டுவரப்பட்ட, “வடக்கு, கிழக்கில் காணாமல்போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல், வடக்கு, கிழக்கு பிரதே சங்களில் யுத்தம் நடைபெற்ற கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு காரணங்களால் காணாமல்போயுள்ளவர்கள் தற்போது உயிர் வாழ்கின்றார்களா, இல்லையா என்பதையிட்டு துரிதமாக விசாரணை செய்து, இவர்கள் உயிருடன் இல்லாதிருப்பின் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குதல் வேண்டும்” என்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் வஜிர அபேவர்தன மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,

“காணாமல்போனோர் விவகாரம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட விடயம் அல்ல. இது முழு நாட்டுக்கும் உரிய பிரச்சினையாகும்.

காணாமல்போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றல்ல. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. மரணச் சான்றிதழ் வழங்கும் அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் நாம் மரணச் சான்றிதழ் வழங்கமாட்டோம்.

காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்பதை அவர்களது உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மரணச் சான்றிதழ் வழங்கமுடியாது. அதனால் காணாமல்போனதற்கான சான்றிதழ் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட இந்தப் பத்திரம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இரண்டு மாதங்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்க நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். காணாமல் போகச் செய்யப்பட்டோர் மீள கண்டுபிடிக்கப்பட்டால், காணாமல்போனதற்கான சான்றிதழ் வழங்கப்படுவதனூடாக குறிப்பிட்ட நபர் காணாமல்போன காலத்தில் கிடைக்கப்பெறாத சிறப்புரிமைகள் அவருக்க மீளக் கிடைக்கும்.

அரச சேவையாளர் எனில், அவருக்கு உரிய ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய சலுகைகள் வழங்கப்படும்” – என்றார்.

Related Posts