Ad Widget

மரங்கள் இருந்த இடத்தில் இராணுவம்:குற்றஞ்சாட்டுகின்றார் முதலமைச்சர்

போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் கொண்டு வந்து குடியேற்றிய அன்னியர்களும் குடியிருக்கின்றதுடன் அவர்கள் குடிமக்கள் செலவில் குளிர்காய்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

13

நேற்று ஊர்காவற்றுரை நாரந்தனை கணேச வித்தியாலயத்தில் காலை 10.30 மணியிளவில் இடம்பெற்ற மரநடுகை மாதமாக நவம்பர் மாதத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எமக்கு மிக அத்தியாவசியமாக வேண்டியதான மரங்களை நட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். கடந்த சில வருடங்களாக மழைவீழ்ச்சியில் பின்னடைவைச் சந்தித்து வந்துள்ளோம். அதற்கான முக்கிய காரணம் எம்மால் தறித்து,வெட்டிஅப்புறப்படுத்தப்பட்ட பல நீண்ட கால மரங்களே.

எனவே நாம் எமது வன மரங்களின் செறிவை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாகப் புதிய மரங்களை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அரசாங்கம் நவம்பர் 15ந் திகதியை தேசிய மரம் நாட்டு நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. நாமோ இந்த மாதம் முழுவதையுமே மரம் நடுகை மாதமாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எமது கோளின் மிக முக்கிய வளமான வன மர இருக்கைகள் உலகின் சுமார் 2 சதவிகித நிலத்தை மட்டுமே மூடி நிற்கின்றன. இவ்வுலகில் காணப்படும் ஜீவன்களில் பாதிக்கு மேற்பட்டவை இவ் விடங்களையே தமதுவாழ்விடங்களாக வைத்துள்ளன. ஆகவே எம்மைச் சுற்றியுள்ள தாவரங்களாவன பறவைகள்,மிருகங்கள்,மற்றும் ஜந்துக்கள் பலவற்றிற்கு வாழ்விடங்களாகஅமைவதைநாம் மறத்தல் ஆகாது.

பாரிய தொழில் அகங்கள் பலருக்கு வாழ்வாதாரங்களை வழங்குவன என்பது உண்மை தான். ஆனால் குறுகிய கால நலன்களையே குறியாக வைத்து வருங்காலச் சந்ததியினரை நாம் வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. ஏற்கனவே எமது நிலங்கள்,சுற்றுச் சூழல் நிலத்தடிநீர் ஆகியவை மாசடைந்துள்ளன.உதாரணத்திற்கு மின்சாரம் வேண்டுமென்றதால் பாரிய எண்ணைத் தேக்கக் கிடங்குகளைச் சுண்ணாகத்தில் வடிவமைத்ததால் இன்று எண்ணையானது நிலத்தினுள் கசிந்துசென்று சுண்ணாகத்தில் மட்டுமல்ல மல்லாகத்திற்கு அப்பாலும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது.

எமது முன்னோர்கள் மட்டுமல்ல இந்நாளில் நாங்கள் கூட மரங்களை மனமுவந்து வணங்குகின்றோம். வேம்பு, துளசி போன்றவை மக்களின் மரியாதையை இன்றும் பெற்ற மரங்கள்.

எனவே இம்மாதம் மரம் நடும் மாதமாக மாற்றப்பட்டமை இம் மாவட்ட ஏன் மாகாணமக்களுக்கு மகத்தானஒரு வரப்பிரசாதமாக அமையப் போகின்றது. எமது சிறு பராயத்தினருக்கு மரம் நாட்ட வேண்டிய அவசியம் பற்றி மனதில் உறையும் வகையில் நாம் எடுத்துக் கூற வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டுவதற்குத் திரைமறைவு முயற்சிகள் -ஐங்கரநேசன்

Related Posts