Ad Widget

மன்னார் விவசாயிகளுக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் விவசாய உள்ளீடுகள்

வடமாகாண விவசாய அமைச்சுக்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் இருந்து 1.5 மில்லியன் ரூபா செலவில் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (23.09.2014) நடைபெற்றது.

மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உள்ளீடுகளை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது தரமான விதைநெல் உற்பத்தியை மேற்கொள்வதற்கும் உணவுத்தானிய உற்பத்திக்கெனவும் பி. ஜி 360 ரக விதைநெல்லும், பல்லாண்டுப்பயிர்களின் கீழ் பழச்செய்கையை மேற்கொள்வதற்கென அன்னாசி உறிஞ்சிகளும், அடர்முறையில் மாமரச் செய்கையை மேற்கொள்வதற்கென நல்லின கறுத்தக்கொழும்பான் மாமரக் கன்றுகளும், விவசாய வனவியலை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தென்னை, மா, மாதுளை போன்றவையும், பசுந்தாட் பசளைப் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் சணல்விதைகளும், காளான் செய்கைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணத்தொகுதிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வெங்காயத்தைச் சேமித்து வைக்கும் கொட்டில்களை அமைப்பதற்கென வெங்காய உற்பத்தியாளர்கள் ஐந்து பேருக்கு தலா 50.000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான இவ் விவசாய உள்ளீடுகள் 250 விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விவசாய உள்ளீடுகள் வழங்கும் இந்நிகழ்ச்சியில் வடக்குமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் பிறமூஸ் சிராய்வா, விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோருடன் மன்னார் பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்களும், பெருந்தொகையான விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

mannar-1 (1)

mannar-1 (2)

mannar-1 (3)

mannar-1 (4)

mannar-1 (5)

mannar-1 (6)

mannar-1 (7)

mannar-1 (8)

mannar-1 (9)

mannar-1 (10)

mannar-1 (11)

mannar-1 (12)

Related Posts