Ad Widget

மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் 440 பைகளில் பொதியிடப்பட்டுள்ளதாக தகவல்!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமான பணியின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) 47 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 440 பைகளில் பொதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய அகழ்வு பணியின் போது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினமும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

குறித்த வளாகத்தின் மையப்பகுதியில் எந்தவித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும், அதே நேரம் வளாகத்தின் நுழைவுப் பகுதியில் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான முறையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்ட விதத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தற்போது மையப்பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை எனவும், வளாகத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள மனித எச்சங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த வளாகத்திலிருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்களும், 440 பைகளில் இலக்கமிடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த வாரத்தில் மாத்திரம் இரண்டு மோதிரங்கள் தடய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts