Ad Widget

மன்னார் எலும்புக் கூடுகள் இருந்த இடத்தில் தோண்ட உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்டிருந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

mannar_grave_elumbu-born

இந்தப் பகுதியில் 80க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, கண்டெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, இந்தப் பிரதேசத்தில் அகழ்வு வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று காணாமல் போனவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தோன்றி வாதிட்ட சட்டத்தரணிகளில் ஒருவராகிய விவேகானந்தன் புவிதரன் தெரிவித்தார்.

அதேவேளை, முன்னர் அகழ்வு வேலைகள் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட பாழடைந்த கிணறு ஒன்று முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், அந்தக் கிணற்றின் உள்ளேயும் மனித எலும்புக் கூடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, அந்தக் கிணறு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதனையும் தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதனையடுத்து அந்தக் கிணறு இருந்த இடத்தைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது, அத்துடன் இந்தக் கிணறு சம்பந்தமாக கோரிக்கை விடுத்திருந்த சட்டத்தரணிகளும் அந்த இடத்தைச் சென்று பார்வையிடுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற சட்டத்தரணிகளினால் அந்தக் கிணறு இருக்குமிடத்தைக் கண்டறிய முடியாதிருந்ததாகவும் அங்கு மழை வெள்ளம் தேங்கியிருந்ததனால், கோடை காலத்தில் அதனைக் கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தெரிவித்தார். இந்த வழக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Related Posts