Ad Widget

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வருக்கு விளக்கமறியல்!

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்

இதன்போது, சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் தாயார் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை பொலிஸார், குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடைய நான்கு பேரை கைது செய்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும் மன்னார் நீதவானிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போதே மன்னார் நீதவான், குறித்த 4 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறியபோது, அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து, குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர். அப்போது சிறுவனின் தாய், தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியுள்ளார். ஆனாலும் சிறுவனை தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்தவேளையில், தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஓடி சென்று பார்த்தபோது மகன், தற்கொலை செய்த நிலையில் இருந்ததாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts