Ad Widget

மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியது என்பதை ஆய்வு செய்வதற்கான காபன் சோதனைக்காக அவை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வழிநடத்தும் மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வு நிறுவகத்திற்கு மனித எச்சங்களின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 185 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச கட்டட நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித புதைகுழி அடையாளங் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மனித புதைகுழியை அகழ்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

நீதிமன்ற அனுமதிக்கமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அகழ்வுப் பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய நிபுணர் உள்ளிட்ட சட்ட வைத்தியர்கள், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினமும்(வியாழக்கிழமை) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts