Ad Widget

மன்னாரில் மனித எச்சங்கள்: நீதவான் முன்னிலையில் அகழ்வு!

மன்னாரில் மனித மனித எச்சங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகிலுள்ள கழிவு நீர் செல்லும் மதகிலிருந்து குறித்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் நேற்று முன்தினம் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதோடு, மன்னார் நீதிமன்றின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக விசேட சட்ட வைத்திய அதிகாரி டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ, மன்னார் சட்ட வைத்திய அதிகாரி எம்.யு.எம்.சப்வான் ஆகியோர் முன்னிலையில் நேற்று (புதன் கிழமை) மாலை அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் இந்த நடவடிக்கைகளின் போது வேறு எவ்வித தடயப் பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட மனித மண்டையோட்டை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் மன்னார் பொது மயானம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts