Ad Widget

மன்னாரில் பயறு அமோக விளைச்சல்

மன்னார் மாவட்டத்தில் சிறுபோகத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பயறுச்செய்கை அமோக விளைச்சலைக் கண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04.09.2015) மன்னார் நானாட்டனில் இடம்பெற்ற வயல்விழாவில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

02

பெரும்போகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறுபோகத்தில் ஈடுபடுவதில்லை. நெற்செய்கைக்கு அதிகளவில் நீர் தேவைப்படுவதால் சிறுபோகத்தில் அரிதாகவே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டும், பெரும்போகத்துக்கும் சிறுபோகத்துக்கும் இடைப்பட்ட காலத்திலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டியும் வடக்கு விவசாய அமைச்சு மறுவயற்பயிர்களின் செய்கையை ஊக்குவித்து வருகிறது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 100 விவசாயிகளுக்கு ஏறத்தாழ 100 ஏக்கரில் மறுவயற்பயிர்களில் ஒன்றான பயறு செய்கையை மேற்கொள்வதற்குரிய விதைபயறு கடந்த யூன் மாதம் வழங்கப்பட்டிருந்தது. இரண்டுமாதப் பயிரான பயறு ஒருதடவை நீர்ப்பாசனத்துடன் ஏக்கருக்கு 400 கிலோ என்ற அளவில் இப்போது பாரிய விளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

பயறு அறுவடை விழாவுக்கு வந்திருந்த விவசாய அமைச்சரிடம் விவசாயிகள் தனியார் வர்த்தக நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் பயறை கொள்வனவு செய்ய முயல்வதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்திப் பிரதி ஆணையாளருடன் கலந்துரையாடி ஒரு கிலோ பயறுக்கு 200ரூபா நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதுடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாகப் பயறைக் கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வயல் விழாவில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், சூ.பி.சிராய்வா, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் ஆகியோரும் அதிக எண்ணிக்கையான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts