Ad Widget

மனைவியை கோடரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

கோடரியால் மனைவியைக் கழுத்து தலை என்பவற்றில் கொத்திக் காயப்படுத்தி கொலை செய்த கணவன் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

பெண்கள், சிறுமிகள் மீதான கொலை வெறி தாக்கதல்கள், காட்டு மிராண்டித்தனமான பாலியல் வல்லுறவுக் கொலைகள் இடம்பெறுகின்ற ஒரு சூழலில், அந்த அநியாயங்களுக்கு உரிய நீதி கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்ற வேளையில் பெண் என்றும் பாராமல் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவனுக்கு இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,

கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் சிவசீலன் ஜெயசுதா என்பவருக்கு மரணத்தை விளைவித்தமையினால், அவருடைய கணவராகிய நாகராஜா சிவசீலன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு எட்டு மணியில் இருந்து இரவு பத்தரை மணிவரையில் எதிரி தனது மனைவியை அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தார் என்று எதிரியின் பக்கத்து வீட்டுப் பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘இரவு எட்டு எட்டரை மணிக்குத் தொடங்கிய சண்டை அன்றிரவு பத்தரை மணிவரையிலும் நடந்தது. என்னை அடிக்காதே, என்னை அடிக்காதே என்று கத்திக் கொண்டிருந்த அந்தப் பெண் பின்னர், ‘என்னைக் கொல்லப் போகிறான், என்னைக் கொல்லப் போகிறான்’ என்று அலறும் சத்தம் கேட்டது. பத்தரை மணிக்கு அந்தப் பெண்ணிடமிருந்து பெரிய ஓலம் ஒன்று கேட்டது. அதன் பின்னர் ஒரே நிசப்தமாகி அமைதியாகிவிட்டது. மறுநாள் காலையில் நாங்கள் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அந்தப் பெண்ணின் சடலம் பாயினால் மூடப்பட்டு கிடந்ததைக் கண்டோம்’ என்று அந்தப் பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில், இந்தச் சாட்சியத்தை மிகவும் முக்கியமான சாட்சியமாக நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

தனது மகளின் சடலம் நிர்வாணமாக பெட் சீற்றினால் சுற்றப்பட்டு, பின்னர் பாயினால் சுற்றப்பட்டு கிடந்ததாக, கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை மருத்துவ பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலசுப்பிரமணியம் வெளிநாடு சென்றிருந்ததனால், அவருடைய மருத்துவ அறிக்கையைப் பார்வையிட்டு, டாக்டர் கந்தையா ரட்ணசிங்கம் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

கழுத்து, தலை என்பவற்றில் பல வெட்டுக் காயங்கள் காண்பபட்டன. கழுத்தில் இரண்டாம் மூன்றாம் எலும்புகள் உடைந்த நிலையில் இருந்தன. கழுத்து முன் பக்கத்து நாண் துண்டாக்கப்பட்டிருந்தது. தலையின் பின்பக்கத்திலும் பல வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இக் காயங்களினால் மூளை சிதைவடைந்ந நிலையில் காணப்பட்டது. மண்டையோட்டில் பல வெட்டுக் காயங்கள் அவதானிக்கப்பட்டிருந்தன. இவை மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான வெட்டுக் காயங்கள் என டாக்டர் கந்தையா ரட்ணசிங்கம் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச்சம்பவம் குறித்து ஏதாவது கூற விரும்புகின்றீரா என நீதிமன்றம் கேட்டபோது,சொல்வதற்கு எதுவுமில்லை என எதிரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகளின் முடிவில் இந்த வழக்கின் எதிரியாகிய கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கொலைக்குற்றம் புரிந்துள்ளார் எனவே அவரை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டுள்ளது என நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்தத் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொலை செய்யும் எண்ணத்துடன், ஒரு பெண் என்றும் பாராமல் தனது மனைவியை எதிரியான கணவன் கோடரியினால் தலை கழுத்து என்பவற்றில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அந்தப் பெண்ணை கேவலமான முறையில் நிர்வாணமாக்கி இறைச்சி கடையில் மிருகங்களை வெட்டுவது போன்று எதிரி கொடூரமாக வெட்டியுள்ளார். இதன் மூலம் எதிரியின் கொடூரமாகக் கொலை செய்யும் எண்ணமும் வெளிப்பட்டுள்ளது. எனவே, எதிரி கொடூரமாகக் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்திருக்கின்றார் என்பது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்றது என நிதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related Posts