Ad Widget

மனித எச்சங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச நிபுணத்துவம் தேவை: மாவை

செம்மணி உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக அரசாங்கம் நீதியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான பிரதேசங்கள் மிகவும் முக்கியத்துவம் வழங்கி விசாரிக்கப்படவேண்டும்.

ஏனெனில் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் மக்கள் இவ்வாறான பிரதேசங்களில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்வாறு கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவையா என்பது குறித்து எச்சரிக்கையுடன் அணுகுவதுடன், இராணுவத்திற்கெதிரான போர்க் குற்றங்களை நிரூபிப்பதற்கான சாட்சியங்களாக இவற்றினை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts