Ad Widget

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார்.

alan_keenan

பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கூறியிருப்பது குறித்துப் பேசிய ஆலன், போர்க்குற்றம் குறித்த எந்த ஒரு முயற்சியிலும் சாட்சிகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட விஷயங்களில் சர்வதேச உதவி தேவை என்று ஆலன் குறிப்பிட்டார்.

“குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கும் எந்த ஒரு முயற்சியிலும் நம்பகத்தன்மை இருக்க வேண்டுமானல், சாட்சிகளின் பாதுகாப்பு, புலனாய்வு, விசாரணை, ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் சர்வதேச தலையீடு தேவை என்று நினைக்கிறோம்” என ஆலன் தெரிவித்தார்.

இலங்கையில் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றில் திறமையானவர்கள் இருந்தாலும் கடந்த 30 – 40 ஆண்டுகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் வெகுகுறைவாகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆலன் சுட்டிக்காட்டினார்.

“கடந்த 30-40 ஆண்டுகளில் மனித உரிமை மீறலுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை நீங்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலும் கீழ்நிலை வீரர்களும் காவல்துறையினருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆணையிட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை” என்கிறார் ஆலன்.

அதனால், சர்வதேச உதவியின்றி போர்க் குற்றம்போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை விசாரிப்பதற்கு இலங்கையால் முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார். “மாகாண சபைகளை வலுப்படுத்த வேண்டும்”

இலங்கையில் நிரந்தத் தீர்வு வேண்டுமெனில், மாகாண சபைகளை வலுப்படுத்தத் துவங்க வேண்டுமென ஆலன் குறிப்பிட்டார்.

“வடக்கு, கிழக்கு மாகாணம் போன்றவற்றுக்கு போதுமான வள ஆதாரங்களை அளிக்க வேண்டும். மேற்கு தெற்கு மாகாண சபைகள் கூடுதல் அதிகாரங்களை விரும்பினால் அவற்றுக்கும் அளிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, குறிப்பாக வட மாகாண சபை முதல்வர் அந்த அமைப்பை செயல்பட வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். பணம், பயிற்சி போன்றவற்றை அளிப்பதன் மூலம் மத்திய அரசு அதனை ஆதரிக்க வேண்டும்” என்கிறார் ஆலன்.

தமிழ் மக்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வளிப்பதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என ஆலன் கூறினார்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள், குறிப்பாக, காணாமல் போனவர்கள் குறித்த பிரச்சனைகள், ராணுவம் தன் பிடியில் வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு மக்களைத் திரும்பச் செய்வது, ராணுவத் தலையீடின்றி சிவில் நிர்வாகம் நடக்க உதவுவது, பாதுகாப்பு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பைக் குறைப்பது போன்றவற்றின் மூலமாக மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க முடியும் என்கிறார் ஆலன்.

இலங்கை, வலுவான வளமான நாடாக இருக்க வேண்டுமானால், எல்லா சமூகங்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஆலன் குறிப்பிட்டார்.

இலங்கையில் மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் இருந்தாலும் ராஜபக்ஷே ஆட்சிக்காலத்தில் அவர்களிடம் பெரும் அச்சம் நிலவியதாகவும் ஆனால் நிலைமை இப்போது மாறியிருப்பதாகவும் ஆலன் கூறியிருக்கிறார்.

Related Posts