Ad Widget

மனித உரிமை ஆணைக்குழுவில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கும் நோக்கில் இனந்தெரியாத மர்ம நபர்கள் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் மேற்படி ஊடகவியலாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான உறுதிமொழியை வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர்களை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திக்கச் சென்றபோது, ஊடகவியலாளர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர்.

அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள், தங்களை பொலிஸார் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தம்வசம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஊடகவியலாளர்களைத் தாக்க முயன்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய ஊடகவியலாளர்களை அந்நபர்கள் துரத்திச் சென்ற போது, அவ்வூடகவியலாளர்கள் நேரடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குள் ஓடிச் சென்றனர். இது தொடர்பில் மேற்படி 3 ஊடகவியலாளர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், துரத்திய இருவரில் ஒருவரின் புகைப்படத்தையும் பொலிஸாரிடம் கையளித்தனர்.

துரத்திச் சென்றவர்கள் பொலிஸார் என அடையாளம் காணப்பட்டதையடுத்து, ஊடகவியலாளர்களை மறித்துக் கதைக்க முற்பட்ட போது அவர்கள் தங்களை தாக்கிவிடுவார்களோ என்ற பயத்தால் தாங்கள் நகம் வெட்டும் கட்டரைக் காட்டி அவர்களைத் துரத்தியதாக அந்த இரு பொலிஸாரும் பொலிஸில் கூறினர்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார், இருதரப்பையும் சமாதானமாகச் செல்லுமாறு யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். இந்நிலையிலேயே, மேற்படி ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

யாழ், ஊடகவியலாளர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி துரத்தியது பொலிஸாரா?

Related Posts