மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் அமைப்பின் தலைவி யோகராசா கலாறஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும். நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக கடந்த அரசுகளாலும் அவர்களை சார்ந்திருந்த அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
எங்களுக்கான நீதி என்பது சர்வதேசத்தின் ஊடாகவே கிடைக்க வேண்டும். குறிப்பாக, வடக்கு – கிழக்கில் செம்மணி, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகளின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சித்திரவதை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவையாகவோ உயிருடன் புதைக்கப்பட்டவையாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்.
அதேவேளை, வடக்கு – கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஒன்றுதிரள, ஓரணியில் திரண்டு தங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.