Ad Widget

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் கைதி யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்கிடமாக ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த அரசியல் கைதியை உடனடியாக வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் கோரியதையடுத்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவரை உடனடியாக சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் சார்ள்ஸ் நிர்மலாநாதன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று தாம் விடுத்த கோரிக்கையை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும், அதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குறித்த கைதியை உடனடியாக சிறைச்சாலையிலிருந்து வெளியேற்றி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இராசையா ஆனந்தராசா என்ற குறித்த கைதி, வைத்தியப் பரிசோதனைகளுக்காக யாழ். போதானா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விடயத்தையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உறுப்படுத்தினார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாகவே தனக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா ஆனந்தராசாவும், கடந்த 8ஆம் திகதி அவர்களை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts