Ad Widget

மத்தியும் வடக்கும் இணைந்தால் மக்களுக்கு நன்மை – யாழ். ஆயர்

இலங்கையின் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை புதன்கிழமை (17) தெரிவித்தார்.

jaffna-ayar-norway

இலங்கைக்கான நோர்வே தூதுவர் எச்.ஈ.கிறிட் லோஷனுக்கும் யாழ் மறைமாவட்ட ஆயருக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ் ஆயர் இல்லத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுகையிலேயே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கூறிய அவர், ‘மாவட்ட ஆயர்கள் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்து நான் பேசும் போது யாழ்ப்பாணத்திலே மாகாணசபை சரியாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனையிட்டு நாம் வருத்தம் அடைகின்றோம். அரசு மாகாண சபையுடன் சேர்ந்து ஒத்துழைத்து மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘மாகாணசபையுடன் சேர்ந்து பல நன்மைகளை செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் மாகாணசபை எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசு ஏற்பாடு செய்யும் எந்தவொரு கூட்டத்துக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருவதில்லை. அப்படி இருக்கும் போது எவ்வாறு சேர்ந்து செயற்படுவது?. எங்களுடன் ஒத்துழைத்தால் நாங்கள் பல நன்மைகளை செய்யலாம் என்றார்.

ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சரிடம் கூறினேன். இது குறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர், நாங்கள் எவ்வளவோ விண்ணப்பித்திருந்தும் ஆளுநரை மாற்றாமல் சிவில் சமூகம் சார்ந்த ஒருவரை நியமிக்காமல் முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதியை மீண்டும் அரசாங்கம் நியமித்துள்ளது.

ஆளுநர் எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக உள்ளார். நாங்கள் கொண்டுவந்த பிரேரணைகளை மறுத்துவிட்டார். இதனால் வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கடினமாகவுள்ளது என்று கூறினார்.

இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒத்துழைத்தால் தான் மக்களுக்கு நன்மைகள் ஏற்படும் என நான் கூறினேன். இந்த விடயம் தொடர்பிலேயே நோர்வே தூதுவரிடமும் கூறியுள்ளேன் என்று ஆயர் கூறினார்.

வடபகுதிக்கு பாப்பரசர் வருவது பற்றியும் அதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் அரசாங்கத்துக்கு செய்திகள் வழங்குவாரா என்பது பற்றியும் நோர்வே தூதுவர் என்னிடம் கேட்டார்.

வடபகுதிக்கு பாப்பரசர் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆகவே எந்தவித ஆயத்தங்களையும் நாங்கள் செய்யத் தேவையில்லை. அவர் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு சமயவாதி.

எனவே அவர், அதற்குரிய செய்தியை தருவார். எவ்வாறெனினும், பாப்பரசரை சந்திப்பதற்கு மக்கள் ஆயத்தமாகவுள்ளனர் என தூதுவருக்கு கூறியதாக ஆயர் மேலும் தெரிவித்தார்.

Related Posts