Ad Widget

மதுபானம் வழங்க மறுத்த அரசியல் கைதியின் மோட்டார் சைக்கிள், பணம் பொலிஸாரால் பறிமுதல்!

மதுபானம் வழங்காதால் அரசியல் கைதி ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டு அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று சாவகச்சேரி வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி வடக்கு, டச்சு வீதியில் வசித்த சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து மகளின் மருத்துவத் தேவைக்காக விடுமுறையில் வீடு வந்துள்ளார்.

முன்னாள் போராளியான அவர், 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணைக்கென்று இரகசியப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமுக்கு புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டிருந்தார்.

விடுமுறையில் வந்த அவர், மகளுடைய மருத்துவத்துவ தேவையை முடித்துக் கொண்டு நலன்புரி முகாமுக்குத் திரும்பவிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 அளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் சிலர் மது போதையில் வீட்டுக்கு வந்து 5 போத்தல்கள் மதுபானம் வாங்கி வருமாறும் அல்லது பணம் தருமாறும் கேட்டு தன்னை அச்சுறுத்தினர் எனவும் – அவற்றைக் கொடுக்க மறுத்ததால் வெளிக் கேற்றை உடைத்ததோடு, தனது மனைவியின் மோட்டார் சைக்கிளையும் அதிலிருந்த 38 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts