Ad Widget

மதியபோசனத்தையடுத்து காலியான வடமாகாண சபை ஆசனங்கள்

வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை.

அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இதன்போது கல்வி அமைச்சின் கீழான முன்பள்ளி நியதிச் சட்டம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் சபையில் சமூகமளித்திருந்ததுடன், அவர்களில் சிலர் சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, கைகளில் அலைபேசியை வைத்து அதில் கவனம் செலுத்திய வண்ணம் இருந்தனர்.

மதிய போசன இடைவேளைக்காக சபை கலைந்து மீண்டும் கூடியதும், அமைச்சின் செயலாளர்களின் இருக்கைகள் அனைத்து காலியாகவிருந்தன. அத்துடன், உறுப்பினர்களில் சிலரையும் காணவில்லை.

38 உறுப்பினர்களைக் கொண்ட வடமாகாண சபையில் நேற்றைய மதிய போசனத்தின் பின்னர் 17 உறுப்பினர்களே சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த விவாதத்தில் உறுப்பினர் கந்தை சர்வேஸ்வரன் உரையாற்றுக்கொண்டிருக்கும் போது, இடையில் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எழும்பி கருத்துக்கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த சர்வவேஸ்வரன் தான் உரையாற்றிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவரைக் கருத்துக்கூறுமாறும், தான் உரையாற்றும் போது குழப்ப வேண்டாம் எனவும் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர், ஒரு உறுப்பினர் உரையாற்றும்போது மற்றைய உறுப்பினர் இடையில் குழப்புவது சபையின் ஒழுங்கு விதியை மீறுவதாகும். சபைக்கு என்று ஒழுங்கு விதிகள் உள்ளன. அதனை அனைத்து உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். அதனைக் கடைப்பிடிக்காதவர்களை சபையில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் தனக்கு உள்ளதாக கூறினார்.

Related Posts