Ad Widget

மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கு சிறப்புரிமை அட்டை அறிமுகம்!

யாழ். மாநகர சபையினால் குறித்த காலப்பகுதியினுள் மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்காக சிறப்புரிமை அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்அட்டையானது கடந்த 3 வருடங்களில் ஜனவரி மாதத்திற்குள் மதிப்பீட்டு வரிகளைச் செலுத்தி நகர அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் வாழும் பிரஜைகளுக்கு உரித்தானது.

அதாவது குறித்த வருடத்திற்குரிய சோலைவரி கொடுப்பனவினை அந்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியினுள் நிலுவை எதுவுமின்றி செலுத்தும் அனைவரும் மாநகர சபையில் இவ்அட்டையினை பெற்றுக் கொள்ள முடியும்.

சிறப்புரிமை அட்டையினை பெற்றுக்கொள்பவர்கள் மாநகர சபையினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக விசேட சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதாவது இவ் சிறப்புரிமை அட்டைக்கு உரித்துடையவர்கள் மாநகர சபை நூலகங்களில் எந்தவித கட்டணங்களுமின்றி அங்கத்தவராக இணைந்து இலவசமாக புத்தகங்களை பயன்படுத்துவதோடு நூலகத்தினுள் இலவச இணையசேவை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் சபையினால் வழங்கப்படும் மண்டப பாவனைகள், வாகனப் பாவனைகள் தொடர்பில் அவற்றை பயன்படுத்தும் போது விசேட கட்டணக் கழிவுகள் வழங்கப்படும்.

கழிவகற்றல், நீர்வழங்கல் என எத்தகையதொரு தேவைக்காகவும் மாநகர சபையின் உதவியை பெறமுயற்சிக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts