Ad Widget

மதச்சார்பற்ற நாடாக இலங்கை மிளிரவேண்டும் ; சம்பந்தன்

இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதச் சார்பின்மையில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ள சமய புறக்கணிப்பு எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் அனைத்து மக்களும் இணைந்து வாழக்கூடிய சமய சுதந்திரம் ஏற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனித அன்னை திரேசாவின் நினைவு தின நிகழ்வு நேற்று வௌ்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பாதுகாவலன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகமும் யாழ்.கத்தோலிக்க திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்திய துணைத்தூதுவர் எம்.நட்ராஜன் மற்றும் அன்னை திரேசாவுடன் இணைந்து பணியாற்றிய இந்திய மும்பை தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், மதசார்பின்மைக்கான சிறந்த உதாரணமாக புனித அன்னை திரேசா திகழ்ந்தவர் எனவும் மதசார்பின்மையை தௌிவான கோணத்தில் வௌிக்காட்டியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமும் சமயமும் ஒரு நாட்டின் அத்தியாவசியமான இரு தூண்களாகும். ஆனால் அரசை சமயமும் சமயத்தை அரசும் சார்ந்திருக்க கூடாது. ஒவ்வொருவரும் தான் விரும்பும் சமயத்தை போற்றவும் வழிபடவும் அதனை பின்பற்றுவதற்கும் புரண சுதந்திரம் உண்டு.

அதில் அரசாங்கம் எந்தவித தலையீடும் செய்யக்கூடாது. தனிப்பட்ட சமய சுதந்திரத்தை அல்லது மதச்சார்பின்மையை முடக்க கூடாது. இதுவே மதசார்பின்மையின் முக்கிய பண்பாகும்.

இந்திய அரசியலைமப்பில் அதன் முன்னுரையிலேயே சோஷலிச மதசார்பற்ற குடியரசாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவும் மத சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக குறிப்பிட்டுள்ளது. அரசியலுக்கு அப்பாட்பட்டு நாடுகள் மதசார்பற்று செயற்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் சிலவற்றில் மேற்கத்தேய நாடுகளிலும் கிறிஸ்தவ மதம் பெரும்பான்மையாக காணப்படுவதால் மதச்சார்பின்மையின் பண்புகள் மாறுபடலாம்.

இலங்கையில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது சோல்பரி அரசியலைமப்பின் 29 ஆம் அத்தியாயம் தௌிவாக சில விடயங்களை வரையறுக்கின்றது.

தனிப்பட்ட மதம் கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்கும் எந்தவொரு சட்டத்தினையும் இயற்ற முடியாது. என தௌிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.

ஆனால் 1972 ஆம் ஆண்டு அரசியலைமப்பில் பௌத்த மத்திற்கான அடிப்படை இடப்பட்டிருந்தது அதன் பின்னர் அல்லது 78 ஆம் ஆண்டு அரசியலமைமப்பில் தௌிவாக பௌத்த மத்திற்கு முதன்மை ஸ்தானமும் புத்தசாசனத்தை பாதுகாத்தல் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு எவ்வாறான சமய சீர்திருத்தங்களை கொண்டுவரும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் 1972 மற்றும் 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமையாக விரும்பிய சமயத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையும் மத சார்பற்று இருக்க வேண்டும் என்பதோடு அனைத்து மக்களுக்கும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதசார்பின்மையில் இணைத்து செயற்பட வேண்டும். அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் என்றார்.

Related Posts