Ad Widget

மண்டைதீவுக்கான குடிநீர் விநியோகம் சீரில்லாமையால் மக்கள் சிரமம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரியமுறையில் இடம்பெறாமையால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர்.

குடிநீர் விநியோகம் தடைப்படும் போது 6 கிலோமீற்றர் பயணம் செய்து யாழ். நகர்ப் பகுதிக்கு சென்று மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடாநாட்டில் தீவுப்பகுதி மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியிருக்கின்றனர். குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீரைப் பெற்றுக்கொள்கின்றனர்.

மண்டைதீவு 1 ஆம் வட்டாரம், 2 ஆம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்காக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக அல்லைப்பிட்டி பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

5 அங்கத்தவர் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி குடிநீரை பெற்றுக் கொள்ளவேண்டும்.

பல சமயங்களில் உரியவாறு குடிநீர் கிடைக்காத நிலையே உள்ளது. குறிப்பாக கடந்த 4 தினங்களாக இந்தப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.

இதற்கு அல்லைப்பிட்டி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டமை காரணம் என கூறப்படுகின்றது. இதனால் 4 நாட்கள் முன்னதாக பெறப்பட்ட நீரையே பயன்படுத்துகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் 40 – 50 குடும்பங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts