Ad Widget

மண்டைதீவில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணம் – தீவகம், மண்டைதீவில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டது.

மண்டைதீவு J/7 கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு மேலதிகமாக காணியை வழங்குவதற்காக பொது மக்களுக்கு சொந்தமான காணியை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் இன்று அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காணி உரிமையாளர், அப்பகுதி மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் பிரதிநிதிகள் என பலரும் ஒன்று திரண்டு காணி அளவீடு செய்யும் இடத்திற்கு முன்பாக எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அதனால் அளவீட்டுப் பணியை இடைநிறுத்தி நில அளவீட்டுத் திணைக்கள அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உள்பட வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் கருணாகரன் நாவலன், சிறிபத்மராசா, என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts