Ad Widget

மண்சரிவில் புதையுண்ட பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு

கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின்போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை அறிவித்துள்ளது.

koslanda_manics_land-slide

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தேடுதல் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

மண்சரிவில் புதையுண்ட இடத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அந்த இடத்தைத் தனியொரு பிரதேசமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிலச்சரிவில் புதையுண்டவர்களை கண்டுபிடிப்பதற்குமான தேடுதல் நடவடிக்கைகள் கடந்த 12 தினங்களாக மேற்கொள்ளபட்டு வந்தன.

இந்த நிலையிலேயே தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படுவது தொடர்பான தகவல் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

நேற்றய தேடுதல் நடவடிக்கையின்போது, இரண்டு உடல்களையும் ஒரு பெண்ணின் தலைப் பகுதியையும் கண்டெடுத்ததாக தேடுதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான இராணுவ மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படுவது தொடர்பில் தமக்கு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாளை (இன்று காலை மீண்டும் தேடுதல் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா கூறினார்.

‘உண்மையில், மண்ணில் புதையுண்டு, பழுதடைந்துள்ள உடல்களைத் தேடி எடுத்து அதனைக் கையாள்வதில் பயனில்லை என்றும், அதற்குப் பதிலாக தேடுதல் நடவடிக்கையை நிறுத்தி இந்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரியிருக்கின்றார்கள்’ என்றார் மனோ பெரேரா.

‘இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, மக்களின் விருப்பத்திற்கமைவாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்’ என்றும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா கூறினார்.

இதற்கிடையில், நிலச்சரிவு அழிவில் புதையுண்டவர்களின் சடலங்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்தத் தேடுதல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதற்குப் பலரும் தயாராக இருப்பதாகவும் மீரியபெத்தை நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலச்சரிவில் புதையுண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றபோதிலும், சரியான எண்ணிக்கை 34 தான் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அமரவீர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts