Ad Widget

மணிவண்ணன் ஆதரவு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரின் இறுதி முடிவைக் கேட்டு முன்னணி கடிதம்

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் தொடர்பைப் பேணி வரும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சிலரிடம் அவர்களின் இறுதித் தெரிவினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

இந்தத் தகவலை சட்டத்தரணி மணிவண்ணனுடன் சேர்ந்து இயங்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கிடைத்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“தாங்கள் எமது அரசியல் இயக்கத்துடன் தொடர்ந்து பயணிப்பது அல்லது பயணிக்காது விலகுவது தொடர்பான தங்களின் இறுதித் தெரிவை தாஙகள் தீர்மானிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுகிறது. இக் கடிதம் கிடைக்கப் பெற்று 14 நாள்களுக்குள் தங்களின் இறுதித் தெரிவு தொடர்பாக எனக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அந்த உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டுள்ள அந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் உள்பட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது பெயர் எமது இயக்கத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.

எனினும் எமது அமைப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வகையில் எமது அரசியல் இயக்கத்திற்கும் அதன் தலைமைக்கும் எதிரான கருத்துக்களை பொது வெளிகளிலும் முகநூலினூடாகவும் தெரிவித்து வருகின்றீர்கள்.

எமது அரசியல் இயக்கத்துடன் தங்களை இணைத்துப் பயணிக்க நல்லிணக்கங்களை தாங்கள் தொடர்ச்சியாக மீறி வருகிறீர்கள். எமது அரசியல் இயக்கத்தினை மத்திய குழுவின் தீர்மானங்களே கட்டுப்படுத்துவதாகும். எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பதாயின் மத்தியக் குழுத் தீர்மானங்களை எவரும் – சவாலுக்குட்படுத்த முடியாது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றும் பொதுச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் மயூரனின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அவரிடம் 14 நாள்கள் அவகாசத்தில் விளக்கம் கோரப்பட்ட நிலையில் அவர் பதிலளிக்காததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related Posts